Published : 06 Nov 2023 08:16 AM
Last Updated : 06 Nov 2023 08:16 AM

ம.பி. தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: என்டிடிவி, சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

போபால்: மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் காங்கிரஸை விட பாஜக முன்னிலையில் இருக்கிறது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜகவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாவிட்டாலும் தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் தலைமையில் அந்த கட்சி தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக கமல்நாத் முன்னிறுத்தப்படுகிறார். வாக்குப்பதிவு தேதி நெருங்கும் வேளையில் என்டிடிவி, சிஎஸ்டிஎஸ் லோக்நிதி ஆகியவை இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.

கருத்துக் கணிப்பின்போது மாநிலத்தின் 230 தொகுதிகளிலும் கடந்த அக்டோபர் 24 முதல் 30-ம் தேதி வரை பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

பாஜக முதல்வர் சிவராஜ் சிங்கின் ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, 27% பேர் திருப்திகரமாக இருப் பதாக தெரிவித்தனர். 34% பேர் ஓரளவு திருப்திகரமாக இருப்பதாக கூறினர். சுமார் 16% பேர் பகுதியளவு அதிருப்தியும், 18% பேர் முழு அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். 5% பேர் எவ்வித கருத்தும் கூறவில்லை.

சாலை வசதி மேம்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு 55% பேர் ‘ஆம்' என்றும் 28% பேர் ‘இல்லை' என்றும் பதிலளித்தனர். மின்சார வசதி மேம்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு 54% பேர் ஆதரவும் 24% பேர் அதிருப்தியும் தெரிவித்தனர்.

மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மேம்பட்டிருக்கிறது என்று 36% பேரும், சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று 30% பேரும் கருத்து தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா என்ற கேள்விக்கு 44% பேர் ஆதரவும், 24% பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 38% பேர் ஆதரவு அளித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்துக்கு 34% பேரும், பாஜக மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 4% பேர், நரேந்திர சிங் தோமருக்கு 2% பேர் ஆதரவு அளித்தனர்.

65% பேர் மோடிக்கு ஆதரவு: நகரங்களில் பாஜகவுக்கு 55%, காங்கிரஸுக்கு 35% ஆதரவு உள்ளது. கிராமங்களில் பாஜகவுக்கு 39%, காங்கிரஸுக்கு 44% ஆதரவு இருக்கிறது. பிரதமர் மோடி ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 65 சதவீதம் பேர் முழு திருப்தி தெரிவித்தனர். 29 சதவீதம் பேர் முழு அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மத்திய பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளரை பொறுத்தவரை காங்கிரஸ் தலைவர் கமல் நாத்தை விட பாஜக முதல்வர் சிவராஜ் சிங் முன்னிலையில் இருக்கிறார். இதர அம்சங்களிலும் காங்கிரஸை விட பாஜக சற்று முன்னிலையில் இருக்கிறது என்று என்டிடிவி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x