

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்குமாறு சர்வதேச தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் அமைதியும், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையும் நிலவுவதாகக் கூறியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு சுவிட்சர்லாந்து மாநாட்டில் பிரதமர் அழைப்பு விடுத்தபோது, குஜராத்தின் அகமதாபாத்தில் வன்முறை (பத்மாவத் திரைப்படத்துக்கு எதிரான வன்முறை) வெடித்தது. உ.பி.யில் கலாச்சாரப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்து மதத்தைச் சேர்ந்த பெண், இஸ்லாமிய இளைஞரை எதற்காக மணந்தார் என்ற ரீதியில் விசாரணை மேற்கொள்ள என்ஐஏவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இவ்வாறு ட்விட்டரில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.