

"ஊழல் என்றால் சித்தராமையா; சித்தரமையா என்றால் ஊழல்" என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்திருந்த நிலையில், அமித் ஷா 'மூளையற்றவர்' என கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்காக தீவிரமாக செயல்பட்டும் வருகிறது.
இந்நிலையில், அண்மையில் அமித் ஷா சித்தராமையாவைப் பற்றி விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசும்போது, "அமித் ஷா ஒரு மூளையற்ற மனிதர்" எனக் கூறினார்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. தனது ட்விட்டர் பக்கத்திலும் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டார். ட்விட்டரில், "என்னை ஊழல்வாதி என விமர்சிப்பவர் ஒரு சிறைப் பறவை. அந்த சிறைப் பறவை மற்றொரு சிறைப் பறவையை (எடியூரப்பா) முதல்வர் வேட்பாளராக முன்மொழிகிறது. என் மீதும் எனது அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமித் ஷாவால் அதை நிரூபிக்க முடியுமா? பொய்கள் உதவாது. மக்கள் இந்தப் பொய்களை நம்ப மாட்டார்கள்" என ட்வீட் செய்திருக்கிறார்.