

உணவை வீணாக்காதீர்கள் என விழிப்புணர்வு ஊட்டும் விதமாக மும்பையில் இன்று நடந்த மாரத்தான் ஓட்டப் போட்டியில் 'டப்பாவாலாக்கள்' பங்கேற்றனர்.
மும்பையில் அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு அவர்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று உரிய நேரத்தில் வழங்கி, மீண்டும் காலி டப்பாக்களை அவர்கள் வீட்டிலேயே ஒப்படைக்கும் பணியைச் செய்து வருபவர்கள் 'டப்பாவாலாக்கள்' எனப்படுவர்.
உணவுகளை வீணடிக்கக் கூடாது என்ற நோக்கில் சமீபத்தில் ரொட்டி பேங்க் அமைப்பை மும்பை 'டப்பாவாலாக்கள்' தொடங்கினர். இந்த ரொட்டி வங்கியை பிரபலப்படுத்தும் நோக்கில் அவர்கள் மாரத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டனர்.
'டப்பாவாலாக்கள்' தொடங்கிய ரொட்டி வங்கியில் பிரத்யேகமாக கால்சென்டர் ஒன்று செயல்படுகிறது. அதன்படி, வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகள் அதிகமாகி விட்டால், இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், அதை 'டப்பாவாலாக்கள்' சென்று சேகரித்துக்கொள்வார்கள்.
பின்னர் அந்த உணவு பசியோடு இருக்கும் வீடு இல்லாத மக்களுக்கும், சாலை ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் இலவசமாக அளிக்கப்படும். இந்த நல்ல நோக்கத்துக்காக செயல்படும் ரொட்டி வங்கியை பிரபலப்படுத்தும் நோக்கில் இன்று நடந்த மாரத்தான் 'டப்பாவாலாக்கள்' பங்கேற்றனர்.
மும்பை டப்பாவாலா அமைப்பின்(எம்.டி.ஏ.) செய்தித் தொடர்பாளர் சுபாஷ் தலேக்கர் கூறுகையில், ''நாங்கள் தொடங்கிய ரொட்டி வங்கி அமைப்பை மக்கள் மத்தியில் தெரியப்படுத்தும் நோக்கத்துக்காகவே எங்கள் அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார்கள்.
நாள் ஒன்றுக்கு 2 லட்சம் டிபன் பாக்ஸ்களில் உள்ள உணவுகளை நாங்கள் உரியவர்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறோம். இந்த மாரத்தான் போட்டியின் போது கூட பசியோடு இருக்கும் மக்களுக்கு நாங்கள் உணவுகளை வழங்கினோம்.
அதுமட்டுமல்லாமல், மாரத்தான் ஓடும் சாலையில், கிடக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையும் எங்கள் உறுப்பினர்கள் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தார்கள்.''
இவ்வாறு சுபாஷ் தலேக்கர் தெரிவித்தார்.