

உள்நாட்டுப் போர் நடந்துவரும் இராக்கில் சிக்கித் தவிக்கும் 46 இந்திய நர்ஸ்கள் இதுவரை தங்கி வந்த திக்ரித் நகரிலிருந்து மோசுல் நகருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்திய நேரப்படி நேற்று (வியாழன்) நள்ளிரவு நர்ஸ்கள் மோசுல் நகர் வந்தடைந்ததாக தெரிகிறது. அவர்களின் நிலவரத்தை நெருக்கமாக கண்காணித்து வரும் சிலர், ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலின்படி, 46 நர்ஸ்களும் எவ்வித காயமும் இல்லாமல் பத்திரமாக இருப்பதாக தெரிகிறது.
மோசுல் நகரில் ஒரு கட்டிடத்தில் இரண்டு அறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது என அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்திய நர்ஸ்களை நேற்று திக்ரித் நகரில் இருந்து வெளியேறி தங்களுடன் வருமாறு அழைத்தபோது சற்று மிதமாக நடந்துகொண்ட தீவிரவாதிகள் தற்போது மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இந்திய நர்ஸ்கள் தொடர்பான முந்தையச் செய்தித் தொகுப்பு:
உள்நாட்டுப் போர் நடந்துவரும் இராக்கில் சிக்கித் தவிக்கும் 46 நர்ஸ்கள் இதுவரை தங்கி வந்த திக்ரித் நகரிலிருந்து வேறு இடத்துக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் பஸ்ஸில் அவர்களை ஏற்றிச் சென்றனர்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் வியாழக்கிழமை கூறியதாவது:
நர்ஸ்களை வேறு இடத்துக்கு தீவிரவாதிகள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். சொந்த பாதுகாப்பு கருதி நர்ஸ்கள் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த பகுதிகள் இராக் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதவை என்பதாலும் நர்ஸ்களை மனிதநேய உதவிக்குழுக்கள் அணுக முடியாது என்பதாலும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி தீவிரவாதிகள் சொல்வதை ஏற்கும்படி நர்ஸ்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேறு இடத்துக்கு நர்ஸ்கள் அழைத்துச் செல்லப்பட்டாலும் அவர்களுடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். நர்ஸ்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் சில நர்ஸ்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தீவிரவாதிகள் பிடியில் பிணைக் கைதிகளாக இருக்கும் 39 இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர். சண்டை நடக்கும் பகுதிகளில் சுமார் 100 இந்தியர்கள் சிக்கி இருக்கின்றனர். எர்பில் நகரில் உள்ள இந்தியர்களும் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இராக்கில் சிக்கித் தவிக்கும் நர்ஸ்களை பத்திரமாக மீட்டுவர நடவடிக்கை எடுக்கும்படி கேரள முதல்வர் உம்மன் சாண்டி வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வியாழக்கிழமை சந்தித்து வலியுறுத்தினார். நர்ஸ்களை பத்திரமாக அழைத்து வர உரிய முயற்சி எடுத்து தேவையான உதவி அளிக்கப்படும் என முதல்வரிடம் சுஷ்மா உறுதி அளித்துள்ளார் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே நிருபர்களிடம் சாண்டி பேசியதாவது:
நர்ஸ்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். கவலைப்பட அவசியம் இல்லை. நர்ஸ்களை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வெளியுறவு அமைச்சகமும் இந்திய தூதரக அதிகாரிகளும் முயற்சி எடுத்து வருகின்றனர். செம்பிறை (ரெட்கிரசென்ட்) தொண்டு நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொள்ள தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் செம்பிறை அமைப்பினரால் நர்ஸ்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுவர முடியாது. இவ்வாறு சாண்டி தெரிவித்தார்.
1000 பேருக்கு விமான டிக்கெட்
நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இந்திய தூதரகத்தில் 1500 பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் 1000 பேர் இராக்கிலிருந்து இந்தியா திரும்ப விமான டிக்கெட் வழங்கப் பட்டுள்ளது.
தூத்துக்குடி நர்ஸின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’
தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள நர்ஸ்களில் தூத்துக்குடி கால்டுவெல் காலனி 5-வது தெருவை சேர்ந்த பிளாஸி லோபஸ் என்பவரின் மகள் லெசிமா ஜெரோஸ் மோனிஷா (25) ஒருவர்.
நர்ஸ் மோனிஷா, தினமும் தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்தார். புதன்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பேசிய அவர், ‘தீவிரவாதிகள் எங்களை வேறு இடத்துக்கு தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். காலை 10 மணிக்கு தயாராக இருக்குமாறு கூறியுள்ளனர். நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் விடுவதாக தெரியவில்லை. காயமடைந்த தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளிக்க எங்களை அழைக்கின்றனர். எங்களுக்கு பயமாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் ஒரு வேனில் 46 நர்ஸ்களையும் தீவிரவாதிகள் அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், 1.30 மணிக்கு மேல் மோனிஷாவின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகிவிட்டது.