Published : 12 Jan 2018 12:07 PM
Last Updated : 12 Jan 2018 12:07 PM

புதிய விர்ச்சுவல் அடையாள அட்டை பயன் தருமா?- ஆதார் விவகாரத்தில் காலம் தாழ்ந்த நடவடிக்கை என விமர்சனம்

ஆதார் விவரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு கொ்ணடு வந்துள்ள புதிய மெய் நிகர் (விர்ச்சுவல்) அடையாள அட்டை கால தாமதமான நடவடிக்கை எனவும், இதனால் முழு அளவில் பயன் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மத்திய அரசால் நாடு முழுவதும் 119 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 12 இலக்க பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண் விழித்திரை, கைரேகைகள், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆதார் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆதார் எண்கள் அரசு திட்டங்கள், சமூக நல பாதுகாப்பு, மானியம், வங்கி கணக்கு, மொபைல் போன் இணைப்பு என பலவற்றிக்கும் கட்டாயமாக்கப்பட்டதால், ஆதார் எண் பெற்றவர்கள், தங்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட துறை, ஏஜென்சிகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துடனும் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு பகிரப்படும் ஒருவரின் ஆதார் விவரங்கள் வெளியாவதாக கூறி சர்ச்சை எழுந்து வருகிறது. 500 ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் கிடைப்பதாக கூறி அதுபற்றிய தகவல்களை, பத்திரிக்கையாளர் ஒருவர் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டார். இதுபோன்ற சர்ச்சை காரணமாக, ஆதார் தொடர்பாக பதிவு செய்த தங்கள் விவரங்கள் பாதுக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வருகிறது..

இந்நிலையில், தனிநபர் ரகசியங்கள் காக்கப்படும் நோக்கத்துடன், குறைவான தகவல்களை மட்டுமே கொண்ட, தற்காலிக மெய்நிகர் அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.. மொபைல் போன் சிம்கார்டு உள்ளிட்டவற்றிற்கு, இந்த மெய்நிகர் அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ஆதாரில் பதிவு செய்துள்ள முழு விவரங்களின் ரகசியம் வெளியாகக்கூடும் என்ற அச்சம் எழாது. ஆதார் எண் பதிவு செய்தவர்கள், தேவை ஏற்படின், இணையதளத்தில் இருந்து, குறைந்த தகவல்களுடன் கூடிய இந்த மெய்நிகர் அடையாள அட்டையை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்க இந்த அடையாள அட்டை தற்காலிகமானதாக இருக்கும். தேவை ஏற்படின், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், இதுபோன்ற தற்காலிக அடையாள அட்டையை பெற முடியும்.

இதுமட்டுமின்றி பல்வேறு ஏஜென்சிகளுக்கும், தனிநபரின் ஆதார் குறித்த அனைத்து தகவல்களையும் தருவதற்கு பதிலாக குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் இந்த மெய்நிகர் அடையாள அட்டையில் அளிக்க தேசிய தனிநபர் அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆனால், இது காலம் தாழ்ந்த நடவடிக்கை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இண்டர்நெட் மற்றும் சமூக மையத்தின் இயக்குநர் பிரனேஷ் பிரகாஷ் கூறியதாவது:

பொதுமக்களின் ஆதார் குறித்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு ஏஜென்சிகளுடன் பகிரப்பட்டு விட்டன. தற்போது, மெய்நிகர் அடையாள அட்டையை கொண்டு வர முயற்சிப்பதால் என்ன பயன் ஏற்படும்’’ எனக்கூறினார்.

இண்டர்நெட் சுதந்திர அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான கிரண் ஜோனாலாகடா கூறுகையில் ‘‘மெய்நிகர் அடையாள அட்டை கொண்டு வரும் திட்டம் நல்லதுதான். ஆனால், இதை செய்ய வேண்டியது 2010ல் தான். ஆதார் திட்டம் அறிவிக்கப்படும்போதே, இதையும் கொண்டு வந்து இருந்தால், விரவங்கள் வெளியாகாமல் இருக்கும். தற்போது ஆதார் எண்ணுக்கு பதிலாக புதிய எண்ணுடன் கூடிய மேலும் ஒரு அட்டையாக மட்டுமே அது இருக்கும்’’ எனக்கூறினார்.

இதுமட்டுமினறி, மானியம் உள்ளிட்ட விவரங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கியுள்ள நிலையில் ஏற்கனவே ஏராளமானோர் ஆதார் எண் விவரங்கள் திரட்டப்பட்டு விட்டன. தற்போது புதிய எண்ணின் அடிப்படையாக கொண்டு விரவங்களை திரட்டினால், அனைவரும் புதிய மெய்நிகர் அட்டையை பதிவு செய்ய வேண்டிய தேவை வருமா? அல்லது ஆதார் விவரங்கள் கைவிடப்படுமா என்பது போன்ற குழப்பங்கள் உள்ளன. மீண்டும் மக்களிடம் இருந்து தரவுகளை திரட்டவது என்பது பெரும் வேலைப்பளுவை ஏற்படுத்தும். எனவே, இதன் மூலம் ஆதார் விவரங்கள் வெளியாகாமல் இருக்க தீர்வு கிடைத்து விட்டதாக கருதி விட முடியாது. இதனை அரசு எப்படி செய்யப்போகிறது என்ற கேள்வியும் உள்ளது’’ எனக்கூறினார்.

மத்திய அரசின் மெய்நிகர் அடையாள அட்டை திட்டம், காலம் தாழ்ந்த நடவடிக்கை என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோரும் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x