Published : 03 Nov 2023 07:00 PM
Last Updated : 03 Nov 2023 07:00 PM

இலங்கை நல்லூர் கந்தசாமி கோயிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு

நல்லூர் கந்தசாமி கோயிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு

யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபாடு மேற்கொண்டார்.

இலங்கைக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள நிர்மலா சீதாராமன், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன், அங்கு வழிபாடு மேற்கொண்டார்.

முன்னதாக, மலையக தமிழர்கள் மத்தியில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மலையக தமிழர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. இலங்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மலையகத் தமிழர்கள் அளித்திருக்கும் பங்களிப்பு மகத்தானது. இன்று இலங்கை என்றாலே தேநீர் என்ற அளவுக்கு பெயர் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் மலையகத் தமிழர்களாகிய நீங்கள்தான்.

மலையகத் தமிழர்களின் வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன். மலையகத் தமிழர்களின் கடின உழைப்பை இந்திய அரசு புரிந்து வைத்திருக்கிறது. உங்களுக்காக வீடு கட்டும் திட்டத்தை இந்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. அதற்கான நிதி உதவியை இந்திய அரசு அளிக்கிறது.

மலையகத் தமிழர்களின் கல்வி, சுகாதாரம் ஆகிய தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசு தயாராக இருக்கிறது. இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அத்தகைய நடவடிக்கைகளை, உதவிகளை வழங்க இந்திய அரசு தயாராக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். உங்களை சந்திப்பதற்கும், உங்கள் முன் பேசுவதற்கும் கிடைத்த வாய்ப்பு மகத்தானது. இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x