Published : 03 Nov 2023 04:54 PM
Last Updated : 03 Nov 2023 04:54 PM

சஸ்பெண்ட் விவகாரம்: மாநிலங்களவைத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க ராகவ் சதாவுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை 

ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா | கோப்புப்படம்

புதுடெல்லி: அனுமதி பெறாமல் தெரிவுக் குழுவில் பெயர் சேர்த்த விவகாரத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா, மாநிலங்களவைத் தலைவரை நேரில் சந்தித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

ஆம் ஆத்மி எம்.பி. சஸ்பெண்ட் விவகார வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநிலங்களவைத் தலைவர் (ஜக்தீப் தன்கர்) ஆம் ஆத்மி எம்.பி.யின் மன்னிப்பை அனுதாபத்துடன் பரிசீலனை செய்து, இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு வழியைக் காண வேண்டும் என்று தெரிவித்தது. மேலும், மிகவும் இளையவரான ராகவ் சதா முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கு விசாரணையின்போது ஆம் ஆத்மி எம்.பி. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில், ராகவ் சதாவுக்கு அவையின் கண்ணியத்தை பாதிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது” என்று கூறியவர், “அவைத் தலைவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க, அவரைச் சந்திக்க அனுமதி வாங்கப்படும்” என்றார்.

அட்டார்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் கூறுகையில், "நெறிமுறைக் குழு இன்று கூடுகிறது. சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நிலவரம் குறித்து தெரிவிக்கும்படி அட்டர்னி ஜெனரலிடம் கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கை தீபாவளிக்கு பின்னர் ஒத்திவைத்தது.

முன்னதாக, மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தின் உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சதா ஆக.11-ம் தேதி முதல் காலவரையறையின்றி அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 34 வயதான ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா மீது டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் (திருத்தம்) 2023-ஐ பரிசீலனை செய்வதற்கான தெரிவுக் குழுவில் ஐந்து மாநிலங்களவை எம்பிகளின் பெயர்களை அவர்களைக் கேட்காமல் சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

சிறப்பு உரிமைகள் மீறப்பட்டதாக 5 எம்பிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் நாடாளுமன்ற உரிமை மீறல் குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ராகவ் சதா அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனது சஸ்பெண்ட்-ஐ எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையின்போது அக்.30-ம் தேதி "காலவரையின்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான விஷயம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x