“கமல்நாத் மாடல் என்பது ஊழல், குற்றம், கமிஷன் நிறைந்தது” - ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான் சாடல்

சிவராஜ் சவுகான் | கோப்புப்படம்
சிவராஜ் சவுகான் | கோப்புப்படம்
Updated on
1 min read

போபால்: மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தின் ஆட்சி மாதிரி என்பது ஊழல், குற்றங்கள், கமிஷன்களை உள்ளடக்கியது என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. மாநிலத்தின் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள பிரித்விபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சிவராஜ் சவுகான் கூறுகையில், "தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கமல்நாத் மாடல் வரும் என்று அவர் (கமல்நாத்) சொல்கிறார். கமல்நாத் மாடல் என்பது என்ன? ஊழல், குற்றங்கள், கமிஷனை உள்ளடக்கியதே அது.

எனது அரசு அமைந்தால் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேரும் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வேலை வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.450-க்கு வழங்கப்படும், உயர்த்தப்பட்ட மின்கட்டணம் குறைக்கப்படும். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் வழங்க முடியாது. கடந்த 2018 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரையிலான கமல்நாத்தின் ஆட்சி காலத்தில் பைகா, பரியா, சஹாரியா பழங்குடிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.1,000 உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தியதன் மூலம் கமல்நாத் அரசு பாவம் செய்துள்ளது.

எனது ஆட்சியில் முதன்மையான திட்டம் ‘லட்லி பெஹ்னா யோஜனா’.இதன்மூலம் பெண் பயனாளிகள் ஒருகுறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் பெற்று வருகிறார்கள். இந்தத்தொகை படிப்படியாக ரூ.3,000 வரை உயர்த்தப்படும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்தத் தொகை நிறுத்தப்படும்" இவ்வாறு அவர் பேசினார். மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இந்த மாதம் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிச.3 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in