Published : 03 Nov 2023 06:40 AM
Last Updated : 03 Nov 2023 06:40 AM

காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது: சத்தீஸ்கர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தாக்கு

பிரதமர் மோடி | படம்: பிடிஐ

கான்கெர்: ‘‘காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது’’ என சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விமானப்படை சிறப்பு விமானத்தில் நேற்று மதியம் ராய்ப்பூர் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கான்கெர் நகருக்கு சென்றார். அங்கு பாஜக சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

சத்தீஸ்கரில் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தப்பமுடியாது. சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு காங்கிரஸ் மிகப் பெரிய துரோகம் இழைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, அரசு வேலைவாய்ப்பில் அவர்கள் ஊழலில் ஈடுபட்டனர். சத்தீஸ்கர் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை, அவர்கள் காங்கிரஸ் அலுவலகமாக்கிவிட்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்தான் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

குடும்பம், உறவினர்கள், ஊழல் ஆகியவைதான் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம். ஆனால், மோடியும், பாஜக.,வும் உங்கள் குழந்தைகள் மீது அக்கறை செலுத்துகிறது.

பழங்குடியினர் நலன்.. சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டுகாங்கிரஸ் ஆட்சியில், காங்கிரஸ்தலைவர்களின் மாளிகைகள் மற்றும் கார்களின் எண்ணிக்கைதான் உயர்ந்தது. அவர்களின் பிள்ளைகளும், உறவினர்களும்தான் பயனடைந்தனர். ஏழைகள் அல்ல. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இடத்தில் வளர்ச்சி இருக்காது. சத்தீஸ்கரை நாட்டின் முன்னணி மாநிலமாக கொண்டு வந்து,இங்குள்ள ஏழைகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் நலனை காக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியுடன் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x