

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக மஹுவா மொய்த்ரா நேற்று மக்களவை நெறிமுறை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா. இவர், நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராந்தானியிடமிருந்து பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாகவும், இதற்காக அவரது நாடாளுமன்ற இணையக் கணக்கு பல முறை தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான ஆதாரங்களை பாஜக எம்பி நிஷிகாந்த் துபேயிடம், மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹத்ராய் வழங்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், குற்றச்சாட்டு தொடர்பாக நவ.2-ல் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்த விசாரணையின்போது, தனிப்பட்ட உறவில் ஏற்பட்ட விரிசல் மற்றும் கசப்புணர்வு காரணமாக உள்நோக்கத்துடன் ஜெய் ஆனந்த் இந்த புகாரை அளித்ததாகவும், தான் எந்த தவறையும் செய்யவில்லை என்று மொய்த்ரா நெறிமுறை குழுவிடம் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நெறிமுறை குழு, மாலையில் அவரிடம் குறுக்கு விசாரணையை மேற்கொண்டது.
அதானி குறித்து கேள்வியெழுப்ப பணம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டைமொய்த்ரா மறுத்தபோதிலும், ஹிராநந்தானிக்கு தனது நாடாளுமன்ற கணக்கின் உள்நுழைவுக்கான பாஸ்வேர்டை வழங்கியதை அவர் ஒப்புக்கொண்டார். கேள்விகளை இடுகையிட மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது என்றும் இதில் தேசிய பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை என்றும் மொய்த்ரா நெறிமுறை குழுவிடம் சுட்டிக்காட்டினார்.
தனிப்பட்ட கேள்விகள் எழுப்பப்படுவதாக கூறி இந்த விவகாரத்தில் மஹுவா மொய்த்ராவுக்கு காங்கிரஸின் உத்தம் குமார் ரெட்டி,பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலி உள்ளிட்ட சில எதிர்க்கட்சி எம்பிக்கள் மஹுவாவுக்கு ஆதரவு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.