“ராமர் கோயிலை வேண்டுமென்றே கிடப்பில் போட்டது காங்கிரஸ்” - அமித் ஷா குற்றச்சாட்டு

ஹரியாணாவின் கர்னால் நகரில் உரை நிகழ்த்திய அமித் ஷா
ஹரியாணாவின் கர்னால் நகரில் உரை நிகழ்த்திய அமித் ஷா
Updated on
1 min read

கர்னால் (ஹரியாணா): நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை பல ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியாணாவின் கர்னால் நகரில், மாநில அரசின் 5 திட்டங்கள் தொடங்கும் விழா நடைபெற்றது. முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "இன்று 5 மக்கள் நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுள்ள ஒன்று, முதல்வரின் தீர்த்த யாத்திரை திட்டம். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று மக்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தார்கள். தொடர்ந்து அரசை வலியுறுத்தினார்கள். ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்தார்கள்.

ஆனால், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோயிலை கட்டும் திட்டத்தை காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. நாட்டு மக்கள் நரேந்திர மோடியை இரண்டாவது முறையாகவும் பிரதமராக்கினார்கள். அவர், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கினார். தற்போது கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. பூமி பூஜையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சிலை பிரதிஷ்டையிலும் பங்கேற்க இருக்கிறார். ஹரியாணா மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் அனைவரும் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்ற ராமரை தரிசிக்க வேண்டும்.

மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் மனோகர் லால் கட்டா அரசும் உள்ளன. இந்த இரு அரசுகள் மீதும் யாரும் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். வளர்ச்சித் திட்டங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் கட்டார் செய்த பணிகளைப் பாருங்கள். அதன் மூலம் நீங்களும் வளர்ச்சித் திட்டங்களை செய்ய முடியும்" என குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in