'சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது' - அமலாக்கத் துறை சம்மனுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் பதில் கடிதம்

அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்.
அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு இன்று (நவ.2) காலை 11 மணிக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் இவ்வாறாக அத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் இவ்வாறாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அக்கடிதத்தில், பாஜகவின் வலியுறுத்தலின்படி 4 மாநிலத் தேர்தலில் தான் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவே அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் தனக்காக சம்மனை அமலாக்கத் துறை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கேஜ்ரிவால் இன்று மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பிரச்சாரத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் ஆஜராவாரா இல்லை திட்டமிட்டபடி பிரச்சாரத்துக்கு செல்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அவர் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவாரா என்பது பற்றி அக்கட்சி வட்டாரம் மவுனம் காத்து வந்தது.

கேஜ்ரிவால் கடித விவரம் வெளியான பின்னர் ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் தரப்பில், "கேஜ்ரிவால் அமலாக்கத் துறை முன்னர் ஆஜராகப்போவதில்லை. மாறாக ம.பி.யில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி மேற்கொள்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி துக்ளக் சாலையில் பாதுகாப்புக்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்தது என்ன? ஒருவேளை கேஜ்ரிவால் இன்று ஆஜராகாவிட்டால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும். அமலாக்கத் துறையின் சம்மனை அதிகபட்சமாக மூன்று முறை ஒரு நபர் ஏற்காமல் இருக்கலாம். அதன் பின்னர் அவருக்கு அமலாக்கத் துறை கைது வாரண்ட் பிறப்பிக்க முடியும்.

அமைச்சர் வீட்டில் சோதனை: இதற்கிடையில், டெல்லி சமூகநலத் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அவருக்குத் தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுங்கத் துறை சம்பந்தமான இந்த வழக்கில் அமைச்சர் ஆனந்த் ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன் நிமித்தமாகவே சோதனை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in