Published : 02 Nov 2023 04:53 AM
Last Updated : 02 Nov 2023 04:53 AM

இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவை

இந்திய நிதியுதவியுடன் இந்தியா - வங்கதேசம் இடையே மேற்கொள்ளப்படும் ரயில் பாதை மற்றும் மின் நிலைய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோர் நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தனர். (படம்: கோப்புப்படம்)

புதுடெல்லி: இந்தியா - வங்கதேசம் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் ரயில் மற்றும் மின் திட்டங்களை பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோர் காணொலி மூலம் நேற்று கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இந்தியா - வங்கதேசம் இடையே வர்த்தகம் தொடர்பான 15-வது கூட்டு செயற்குழு கூட்டம் தாகாவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் இருதரப்பு விஷயங்கள், துறைமுக கட்டுப்பாடுகளை அகற்றுவது, ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், இரு நாடுகள் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், எல்லை பகுதியில் ரயில் பாதை திட்டம், மின்துறை வளர்ச்சி திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோர் நேற்று காணொலி மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இரு நாட்டு எல்லைகளை இணைக்கும் அகாரா - அகர்தலா எல்லை ரயில்பாதை இணைப்பு திட்டம், வங்கதேசத்தின் குல்னா மோங்லா துறைமுக ரயில் பாதை திட்டம், வங்கதேசத்தின் ராம்பல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது மைத்ரி சூப்பர் அனல் மின் நிலையம் ஆகியவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.

இதில், அகாரா - அகர்தலா ரயில் பாதை திட்டம் இந்திய அரசின் ரூ.392.52 கோடி நிதி உதவியில் வங்கதேசம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்பாதையின் மொத்த நீளம் 12.24 கி.மீ.இதில் 6.78 கி.மீ ரயில் பாதை வங்கதேசத்திலும், 5.46 கி.மீ ரயில் பாதை திரிபுராவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

குல்னா - மோங்லா துறைமுக ரயில்பாதை திட்டம் இந்திய அரசின் சலுகை கடன் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ளது. 388.92 மில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பிலான இத்திட்டத்தின்படி, தற்போது குல்னா வரை உள்ள ரயில் பாதைமோங்லா துறைமுகம் வரை 65 கி.மீ.தூரத்துக்கு அகல ரயில் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின்2-வது பெரிய துறைமுகமான மோங்லாதற்போது ரயில் பாதையுடன் இணைப்பு பெற்றுள்ளது.

வங்கதேசத்தின் ராம்பல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1,320 மெகாவாட் திறனுள்ள சூப்பர் அனல் மின் நிலையம் இந்தியாவின் சலுகை நிதியுதவி திட்டத்தின் கீழ் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை என்டிபிசி மற்றும்வங்கதேச மின் வளர்ச்சி வாரியம்ஆகியவை 50:50 என்ற அளவில் கூட்டாக மேற்கொள்கின்றன. இந்த 3 திட்டங்களும் இந்திய - வங்கதேச எல்லை பகுதியில் இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்.

மோடிக்கு ஹசினா நன்றி: இந்நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பேசியதாவது:

இந்த முக்கிய திட்டங்கள் கூட்டாக தொடங்கப்பட்டிருப்பது, இந்தியா - வங்கதேசம் இடையிலான ஒத்துழைப்பை காட்டுகிறது. ஜி20 உச்சி மாநாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கலந்து கொண்டபோது, பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பை அளித்தார். அவரது உற்சாக விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாட்டுஉறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். அதற்கும் நன்றி.

அவருக்கும், இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஷேக் ஹசினா பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x