Published : 31 Oct 2023 06:55 PM
Last Updated : 31 Oct 2023 06:55 PM

“என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால் என் தலைமுடியைக் கூட தொட முடியாது” - மஹுவா

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்துள்ள புகாரில், தன்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால், தனது தலைமுடியைக் கூட தொட முடியாது என குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான எம்.பி மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்து பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, நவம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து மஹுவா மொய்த்ரா அளித்த பேட்டி ஒன்றில், "எதிர்க்கட்சி எம்பிக்கள் வைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் அத்துமீறி ஊடுருவும் முயற்சி நடப்பதாக அந்நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2021-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது. எனினும், அதன்பிறகு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது இரண்டாவது முறை. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவது அரசு நடத்தும் தாக்குதல் என்றே கருத முடியும்.

ஐபோன்களில் குறுஞ்செய்தி வந்தவர்களில் பலரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இதுபோன்ற ஒரு நிகழ்வு நேரும்போது நாடாளுமன்ற சபாநாயகர் தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இ-மெயில் லாகின் குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது. இது முழுக்க முழுக்க குப்பையான விஷயம். என்னைக் குறிவைத்து இது நடக்கிறது. எனக்கு எதிரான சதியை நான் தவிடுபொடியாக்குவேன். என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவும், சஸ்பெண்ட் செய்யவும் விரும்புகிறார்கள். அவர்களால் எனது தலைமுடியைக் கூட தொட முடியாது" என்று தெரிவித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x