Published : 31 Oct 2023 05:18 PM
Last Updated : 31 Oct 2023 05:18 PM

“படேலின் பங்களிப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க காங். அனுமதிக்கவில்லை” - ராஜ்நாத் குற்றச்சாட்டு

லக்னோ: நாட்டை ஒருங்கிணைத்ததில் சர்தார் வல்லபாய் படேல் வகித்த பங்குக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் பல சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த பகுதிகளை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்கு வகித்தவருமான சர்தார் வல்லபாய் படேலின் 148வது பிறந்த நாள் இன்று. இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்னிலையில், ராஜ்நாத் சிங் ஒற்றுமை ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை விவரம்: "நாட்டை ஒருங்கிணைத்ததில் சர்தார் வல்லபாய் படேல் வகித்த பங்கிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற அளவில் அது மட்டுப்படுத்தப்பட்டது.

சர்தார் படேலுக்கு உரிய மரியாதை கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசு உழைத்து வருகிறது. கடந்த 2013ல் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, பாஜக சார்பில் இதேபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அந்த நேரத்தில் நான் அதை கொடியசைத்து துவக்கி வைத்தேன். இப்போது, ​​10 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சராக "ஒற்றுமைக்கான ஓட்டத்தை" கொடியசைத்து தொடங்குகிறேன். நமது இளைஞர்கள் சர்தார் படேலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, அவரிடமிருந்து உத்வேகம் பெற ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இது மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான செய்தி.

சர்தார் படேலின் தொலைநோக்கு பார்வை இல்லாவிட்டால், குஜராத்தின் ஜூனாகத், தெலங்கானாவின் ஹைதராபாத்துக்குச் செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா தேவைப்பட்டிருக்கும். ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது 562 சமஸ்தானங்களாகப் பிரிந்த இந்தியாவாக இருந்தது. ஆங்கிலேயர்கள் வேண்டுமென்றே சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக தனித்தனியாக இருக்க வாய்ப்பளித்தனர். எனினும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேலால்தான், ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்க முடிந்தது. சர்தார் படேலின் தொலைநோக்கு பார்வை மற்றும் அவரது ராஜதந்திர திறனால் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு உறுதி செய்யப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கும் விவகாரம் வல்லபாய் படேலிடம் கொடுக்கப்பட்டிருந்தால், சட்டப்பிரிவு 370 பிரச்சனையே எழுந்திருக்காது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் அதே வேளையில், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாடு விடுதலைப் பெற பாடுபட்ட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களையும் நாம் நினைவுகூர வேண்டும்.

குஜராத்தில் 182 அடி உயர சர்தார் படேலின் சிலையை நிர்மாணித்து அதற்கு ‘ஒற்றுமை சிலை’ என்று பெயரிட்டுள்ளார் பிரதமர் மோடி. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலையைவிட இது பெரியது. சர்தார் படேல் சிலையை விட உலகில் எந்த சிலையும் பெரிதாக இல்லை என்பது நமக்கு கிடைத்தப் பேறு" என்று ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x