Published : 31 Oct 2023 05:20 PM
Last Updated : 31 Oct 2023 05:20 PM

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? - 5 மாநிலங்களை விளாசிய உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அதிகரிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான ஒரு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் சுதான்ஷு துலியா, பிகே மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வழக்கு இன்று இந்த அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உ.பி, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களும் ஒரு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

நீதிபதிகள் வேதனை: வழக்கை விசாரித்த நீதிபதிகள், "காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்வது எதிர்கால சந்ததி மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தலைநகர் டெல்லியில் அக்டோபர் மாதம் மிகச் சிறந்த காலமாக இருக்கும். ஆனால், இப்போது அந்த மாதத்தில் வெளியே செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இதே காலகட்டத்தில் காற்று மாசுபடுவது நடந்துகொண்டே இருக்கிறது. பயிர்க்கழிவுகளை எரிப்பதும் டெல்லியில் இது தொடர்கதையாவதற்கு ஒரு காரணமாக உள்ளது" என்று வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து அரசுத் தரப்பில் இந்தக் காலகட்டத்தில் பலமாக காற்று வீசுவதும், மாசு அதிகரிக்கக் காரணம் என்று சொல்லப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம். "அரசு நிர்வாகமும் கூட காற்றுபோல் துரிதமாக செயல்பட வேண்டும்" என்று கருத்து தெரிவித்தது.

இறுதியாக 5 மாநிலங்களிலும் காற்று மாசுபாடு குறித்த கள நிலவரம் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வலியுறுத்தி வழக்கை வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அந்த அறிக்கையில் காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ - Air Quality Index) இடம் பெற வேண்டுமென்பதையும் அரசு சுட்டிக் காட்டியிருந்தது.

ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல் 300 அளவுக்கு சென்றால், காற்றில் மாசு அதிகம். 301 முதல் 400 வரை மிக அதிகம். 401 முதல் 500 ஏக்யூஐ என்பது மிகவும் மோசமான காற்று மாசு என்று அளவிடப்படுகிறது. நேற்று அக்.30 காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 322 என்றளவில் இருந்தது. எனவே தான் உச்ச நீதிமன்றம் ஐந்து மாநிலங்களும் பிரமாணப் பத்திரத்தில் இதனைக் குறிப்பிடுமாறு வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x