Published : 31 Oct 2023 06:52 AM
Last Updated : 31 Oct 2023 06:52 AM

தேர்தல் பத்திரம் திட்டத்தில் விதிமீறல் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடிக்கிறது.

கடந்த ஆண்டு முதல் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. கடந்த 16-ம் தேதி 3 நீதிபதிகள் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முக்கியத்துவம் கருதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,பி.ஆர்.கவாய், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு இன்று விசாரணையை தொடங்க உள்ளது.

இந்த சூழலில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் 4 பக்க மனுவை தாக்கல் செய்தார். அதில், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிந்து கொள்ள மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. எனினும் அரசியல் கட்சிகளின் வருவாய், அந்த வருவாய்க்கான ஆதாரங்களை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இல்லை. தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமைகளும் மீறப்படவில்லை.

முறையாக வரி செலுத்துபவர்களே தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டது கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x