

மக்களவையின் பட்ஜெட் கூட்டத் தொடரைக் காண காங்கிரஸ் தலைவி சோனியாவின் பேரன் ரெஹான் முதன் முறையாக நாடாளுமன்றம் வந்தார். இது, ஐந்தாவது தலைமுறையையும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சி எனக் கருதப்படுகிறது.
கடந்த புதன்கிழமை அன்று பிரியங்கா மற்றும் ராபர்ட் வதோரா வின் 14 வயது மகனான ரெஹான் திடீரென நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். தனது வயதொத்த சில நண்பர்களுடன் பார்வையாளர் மண்டபத்தில் அமர்ந்து தன் பாட்டி சோனியாவின் நடவடிக்கைகளை ஆர்வமுடன் கவனித்தார். ஆனால், தன் மாமா ராகுல் காந்தி யின் நடவடிக்கைகளை காண ரேஹானுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. இதற்கு, ராகுல் அப் போது சபையில் இல்லாதது காரணம்.
அவை நடவடிக்கைகளுக்கு பின் நாடாளுமன்றக் கட்டிடங்களை நண்பர்களுடன் சுற்றிப் பார்த்த ரெஹான், கடைசியாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற அலுவலக அறைக்கு சென்றார். அவரைக் காண அந்தக் கட்டிடத்தில் இருந்த அரசியல்வாதிகளுடன், காவலர்களும் ஆர்வம் காட்டினர்.
வெளியில் வந்தவரை மடக்கிய சில செய்தியாளர்களிடம் ரெஹான் பேசும்போது, “வெகுநாளாக இருந்த ஆர்வம் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்க்க வந்ததாக” தெரிவித்தார்.
வழக்கமாக தன் தாயின் எம்பி தொகுதியான உ.பி.யின் ரேபரேலிக்கு பிரியங்கா, தன் மகன் ரேஹான் மற்றும் 12 வயது மகள் மிராயாவுடன் செல்வது வழக்கம். ஆனால், அவர்களை, அங்குள்ள விருந்தினர் மாளிகையிலேயே விட்டுவிட்டு, பிரியங்கா மட்டும் கூட்டங்களுக்காக வெளியில் வருவார். இப்போது முதன்முறையாக ரெஹான் தனியாக வெளியில் வந்திருக்கிறார்.
இந்திய அரசியலில் ஜவாஹர் லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பின் ஐந்தாவது தலைமுறையான ரெஹானை அரசியலில் இறக்கும் முயற்சி இது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.