Published : 07 Jan 2018 03:02 PM
Last Updated : 07 Jan 2018 03:02 PM

குஜராத்தில் தமிழக மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி: சாதி பாகுபாடு காட்டப்படுவதாக புகார்

குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவக்கல்லூரியில் எம்எஸ் படித்து வந்த தமிழக மருத்துவர் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக கூறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவக்கல்லூரியில், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் மாரிராஜ், முதுநிலை படிப்பை படித்து வருகிறார்.

இந்நிலையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயக்கமடைந்தார். சக மாணவர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அகமதாபாத் மருத்துவமனையில் சக மருத்தவர்கள் சாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும், அறுவை சிகிச்சை அரங்கிற்குள் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி மாரிராஜ், தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாகர் கூறுகையில் ‘‘அகமதாபாத் மருத்துவக்கல்லூரியில் ஜாதி பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுவது தவறானது. அவர் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. அவர் சார்ந்த துறையின் தலைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவருக்கும் சில மாணவர்களுக்கும் இடையே வேறு சில பிரச்சினைகள் இருந்துள்ளன. இதற்கு முன்பும், மாரிராஜ் இதுபோன்ற மிரட்டலில் ஈடுபட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகத்தை மிரட்டுவதற்காகவே அவர் இதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்’’ எனக்கூறினார்.

அகமதாபாத் மருத்துவமனையில் பெரும்பாலான முதுகலை மருத்துவ மாணவர்கள், குஜராத்தி அல்லது இந்தியில் மட்டுமே பேசுவதாகவும், மாரிராஜ் ஆங்கிலத்தில் பேசியதால் அவருக்கு பதிலளிக்க மறுத்து புறக்கணித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மருத்துவர் மாரிராஜ் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அகமதாபாத் மருத்துவனை தெரிவித்துதுள்ளது. குஜராத்தில் தற்கொலைக்கு முயன்ற மருத்துவர் மாரிராஜ் நெல்லை மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x