

புதுடெல்லி: டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது சிபிஐ.
இருந்தாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த இந்த வழக்கு தொடர்பான அறிக்கையில் கேஜ்ரிவால் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் டெல்லியின் துணை முதல்வராக செயல்பட்ட மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
அவருக்கு இந்த முறைகேட்டில் முக்கிய பங்கு இருப்பதாக சொல்லப்பட்டது. தொடர்ந்து அவரை அமலாக்கத் துறை கைது செய்து விசாரித்தது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை திங்கள்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழலில் நவம்பர் 2-ம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.