நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க ‘மேரா யுவ பாரத்’ இணையதளம் தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: ‘‘நாட்டின் முன்னேற்றத்துக்கான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக நாடு தழுவிய அளவில் ‘மேரா யுவ பாரத்’ இணையதளம் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி தொடங்கப்படும்’’ என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். அதன்பிறகு அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற வானொலி நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அதன்பின் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அதன்படி, நேற்று வானொலியில் 106-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அதற்காக ‘மேரா யுவ பாரத்’ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட உள்ளது. இளைஞர்கள் MYBharat.Gov.in என்ற இணைய முகவரியில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். நாட்டை கட்டி எழுப்புவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக இந்த இணையதளம் செயல்படும். இந்தியாவை வளர்ந்த நாடாக கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் இளைஞர்களின் சக்தியை ஒருங்கிணைக்கும் தனி முயற்சி இது.

மேலும், ஏற்கெனவே நான் பல முறை வலியுறுத்தியது போல இந்த முறையும் பண்டிகைகளின் போது உள்ளூர் மக்களின் உற்பத்தி பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். தற்சார்பு இந்தியா என்ற கனவை நனவாக்க நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இந்தியா இன்று உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாக மாறியிருக்கிறது. மக்கள் சுற்றுலா அல்லாது ஆன்மீக யாத்திரை செல்லும் போது உள்ளூர் மக்களின் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட அவர்களது தயாரிப்புகளை வாங்க வேண்டும். காதி விற்பனை இப்போது முன்னெப்போதும் இல்லாத சாதனை படைத்துள்ளது வரவேற்கத்தக்கது. மகாத்மா காந்தியின் சுயசார்பு என்ற கொள்கைக்கு உதாரணமாக காதி திகழ்கிறது.

கடந்த காலங்களில் 30 ஆயிரம் கோடிக்கு மட்டுமே விற்பனையான காதி பொருட்கள் இந்த மாதம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

நவம்பர் 15-ம் தேதி பழங்குடிகள் பெருமை தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இந்த தினம் மகான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளுடன் தொடர்புடையது. பிர்சா முண்டா நமது அனைவரின் இதயங்களிலும் வாழ்கிறார். உண்மையான துணிச்சல் என்றால் என்ன என்பதையும், தான் கொண்ட உறுதியில் ஒருவர் எவ்வாறு உறுதியாக நிற்பது என்பதையும் நாம் பிர்சா முண்டாவின் வாழ்வில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

அக்டோபர் 31-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள். அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தமிழக எழுத்தாளர்கள் பெருமாள், சிவசங்கரிக்கு பிரதமர் மோடி பாராட்டு

நமது இலக்கியம், ‘‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’’ என்ற உணர்வை சொல்லும் மிகச் சிறப்பான ஊடகங்களில் ஒன்றாகும். இந்த நேரத்தில் தமிழ்மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் சகோதரி சிவசங்கரி ‘Knit India, Through Literature’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இலக்கியம் வாயிலாக இந்த நாட்டை ஓரிழையில் கோர்ப்பதுதான் இந்த செயல்திட்டம். இதுதொடர்பாக அவர் கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்த திட்டம் வாயிலாக 18 பாரத நாட்டு மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை எழுத்தாளர் சிவசங்கரி மொழியாக்கம் செய்திருக்கிறார். இவருடைய இந்த உறுதிப்பாட்டு சக்தி குறித்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.

அதேபோல் கன்னியாகுமரியின் ஏ.கே.பெருமாள், தமிழ்நாட்டின் கதைசொல்லும் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் போற்றத்தக்க பணியைச் செய்திருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக நாட்டுப்புற கலை வடிவங்களைத் தேடித் தேடி,தனது புத்தகத்தில் இடம்பெறச் செய்கிறார். இவர் இதுவரை, கிட்டத்தட்ட 100 புத்தகங்களை எழுதியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கலாம். சிவசங்கரி, ஏ.கே.பெருமாள்ஆகிய இருவரின் முயற்சிகள் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவன. இது தேசத்தின் பெயரை, ஓங்கச் செய்யும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in