

பிரதமரின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா (69) சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அவரது நியமனத்தை சட்டபூர்வமாக்க மக்களவையில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட அவசர சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் தலைவராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய சட்ட விதிகளின்படி ஆணையத் தலைவரோ, உறுப்பினர்களோ ஓய்வு பெற்ற பின்னர் வேறு அரசு பதவிகளை வகிக்கக்கூடாது. இந்த விதியை மீறி நிருபேந்திர மிஸ்ரா பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது நியமனத்துக்காக கடந்த மே 28-ம் தேதி அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.
இந்தச் சட்டத்துக்கு நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் 6 மாதங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் மக்களவையில் வெள்ளிக்கிழமை இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. மாநிலங்களவையில் 68 உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ், அவசர சட்ட மசோதாவை கடுமையாக எதிர்ப்போம் என்று அறிவித் துள்ளது. இதுகுறித்து சசி தரூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியபோது, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை சட்ட விதிகள் மீறப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியபோது, நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் அவசர சட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.