

புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசு பணிக்கு தேர்வான 51 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார்.
நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.
இதன்படி, பல்வேறு அரசுத் துறைகளில் தேர்வாகும் இளைஞர்களுக்கு பணி ஆணைகளை பிரதமர் மோடி அவ்வப்போது வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நாட்டின் 37 நகரங்களில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு மத்தியஅரசுத் துறைகளுக்கு தேர்வானசுமார் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பணி ஆணைகளை வழங்கினார். ரயில்வே, உள் துறை, வருமான வரி, உயர் கல்வி, பள்ளிக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் பணியில் சேர உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ரோஜ்கார் மேளா பயணம் இப்போது முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இதுவரை லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இன்று மேலும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் வெளிப்படையான நடைமுறையும் அமல்படுத்தப்படுகிறது. பணியாளர் தேர்வு முறையில் இளைஞர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பணி நியமனம் தொடர்பான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதுடன் தேர்வு முறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, ஆட்டோமேஷன் மற்றும் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி உள்ளிட்ட புதிய துறைகளில் வேலைவாய்ப்பை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அதேநேரம், பாரம்பரிய துறைகளையும் அரசு பலப்படுத்தி வருகிறது.
இப்போது புதிதாக உருவாகி வரும் வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இளைஞர்களுக்கு உரிய பாடதிட்டங்களும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.