Published : 11 Jan 2018 04:24 PM
Last Updated : 11 Jan 2018 04:24 PM

குதிரை களவு போன பின்பு லாயத்தைப் பூட்டுவதா?- ஆதார் விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிதம்பரம் கேள்வி

 ஆதார் விவகாரத்தில் அரசின் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், குதிரை களவு போன பின்பு லாயத்தைப் பூட்டும் இந்த நடவடிக்கையால் பயன் ஏதும் ஏற்படாது என கூறியுள்ளார்.

ஆதார் விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், புதிய மெய் நிகர் (விர்ச்சுவல்) அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் சிம்கார்டு உள்ளிட்டவற்றிற்கு, இந்த மெய்நிகர் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ஆதாரில் பதிவு செய்துள்ள முழு விவரங்களின் ரகசியம் வெளியாகக்கூடும் என்ற அச்சம் எழாது. ஆதார் எண் பதிவு செய்தவர்கள், தேவை ஏற்படின், இணையதளத்தில் இருந்து, குறைந்த தகவல்களுடன் கூடிய இந்த மெய்நிகர் அடையாள அட்டையை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள், மத்திய அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக தங்கள் ஆதார் விவரங்களை, பல்வேறு நிறுவனங்களுடன் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டு விட்டனர்.

தற்போது, ஆதார் விவரங்களை பாதுகாப்பதற்காக மெய்நிகர் (விர்ச்சுவல்) அட்டையை கொண்டு வரப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது, குதிரை களவு போன பின்பு லாயத்தைப் பூட்டுவது போன்ற நடவடிக்கை. காலம் தாழ்ந்த இந்த நடவடிக்கையால் என்ன பயன் ஏற்படும்?" என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x