

டெல்லியில் 8 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அக்குழந்தையின் 28 வயது உறவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு டெல்லிக்கு உட்பட்ட சகர்பூர் பஸ்தி பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த 8 மாத குழந்தையை வெளியே கூட்டிச் செல்வதாகக் கூறிவிட்டு சூரஜ் (28) என்பவர் குழந்தையை ஒதுக்குப்புறமான இடத்துக்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அந்தக் குழந்தையை மீண்டும் வீட்டில்வந்து கிடத்திவிட்டு எதுவும் அறியாததுபோல் வெளியே சென்றுவிட்டார். குழந்தையின் தாய், வீடு திரும்பியபோது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. அதன், அந்தரங்க உறுப்பிலிருந்து கடுமையான ரத்தப்போக்கு இருந்துள்ளது. இதனையடுத்து அத்தாய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தது. குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சூரஜிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சூரஜ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது (போஸ்கோ) குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி நேற்று பொருளாதார ஆய்வறிக்கை பிங்க் (இளம் சிவப்பு) நிறத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 8 மாத குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே உணர்த்துகிறது.