

புதுடெல்லி: இந்திய தயாரிப்பு மொபைல்களை உலகம் பயன்படுத்துகிறது என பெருமைப்படலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
7வது இந்திய மொபைல் மாநாடு புதுடெல்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது. பிரதமர் மோடி இதனை தொடங்கிவைத்தார். இதில், ஜியோ, ஏர்டெல் உள்பட இந்தியாவின் முன்னணி மொபைல் ஃபோன் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்துறையினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி தொழில்நுட்ப ஆய்வகங்களை' பிரதமர் மோடி வழங்கினார். இந்தியாவின் தேவை மற்றும் உலகின் தேவை இரண்டையும் பூர்த்தி செய்யும் நோக்கில் 5ஜி தொழில்நுட்பப் பயன்பாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆய்வகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி, வேளாண்மை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு சமூக பொருளாதாரத் துறைகளில் 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதுமைகளை புகுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "தொழில்நுட்பம் நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. எதிர்காலம் என்பது இங்கே இப்போது இருப்பதுதான். 5ஜி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்காக இந்த ஆய்வகங்கள் வழங்கப்படவில்லை. மாறாக, 6ஜி தொழில்நுட்பத்தில் நாம் முன்னணியில் திகழ வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை விநியோகத்தின்போது என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நமது அரசு 4ஜி சேவையை விரிவுபடுத்தியபோது எந்த குற்றச்சாட்டும் எழவில்லை; இதனால் எந்த கரையும் ஏற்படவில்லை. 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா உலகை வழிநடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தங்கள் நிறுவனத்தின் பிக்செல் மொபைல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என கூகுள் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டு 5 மொபைல் போன்கள், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை உலகம் பயன்படுத்துகிறது என தற்போது நாம் பெருமையாகக் கூறலாம்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்டோர் உரையாற்றினர்.