கனகபுராவை பெங்களூருவுடன் இணைக்க துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சி

கனகபுராவை பெங்களூருவுடன் இணைக்க துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முயற்சி
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது சொந்த ஊரான கனகபுராவை பெங்களூரு மாநகராட்சியுடன் இணைக்க முயன்று வருகிறார். இதற்கு முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் கனகபுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: கடந்த தேர்தலில் எனது சொந்தஊரான கனகபுராவில் நான் பிரச்சாரம் செய்யாமலேயே மக்கள் எனக்கு மகத்தான வெற்றியை பரிசாக வழங்கின‌ர். அந்த மக்களுக்கு தசரா பரிசு அளிக்கவே இங்கு வந்துள்ளேன். விரைவில் கனகபுராவை பெங்களூரு மாநகராட்சியுடன் இணைக்கப் போகிறேன்.

பெங்களூரு பொறுப்பு அமைச்சரான நான், இந்த நகரின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டியுள்ளேன். கனகபுரா பெங்களூருவுடன் இணைக்கப்பட்டால் இங்கு நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். இங்குள்ள மக்களுக்கு அனைத்து வகையான நலத்திட்டங்களும் கிடைக்கும். கனகபுரா சர்வதேச நகரமாகமாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும் மஜத மாநில தலைவருமான குமாரசாமி கூறியதாவது: டி.கே.சிவகுமாரும் அவரது குடும்பத்தினரும் கனகபுராவை சுற்றிலும் பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். அவற்றின் விலையை உயர்த்தவே கனகபுராவை பெங்களூருவுடன் இணைக்க சிவகுமார் முயற்சிக்கிறார்.

பெங்களூருவில் இருந்து 52 கி.மீ. தொலைவில் கனகபுரா உள்ளது. ஆனால் ராம்நகர் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. ராம்நகரை பெங்களூருவுடன் சேர்க்காமல் கனகபுராவை சேர்த்தால் ராம்நகர் மக்கள் காங்கிரஸை மன்னிக்க மாட்டார்கள்.

பெங்களூருவுடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் இன்னும் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை. இந்நிலையில் கனகபுரா மக்களுக்கு ஆசையை தூண்டும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in