ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

இந்திய ராணுவம் | கோப்புப் படம்
இந்திய ராணுவம் | கோப்புப் படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் இன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள மச்சில் என்ற பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து மாநில காவல் துறையும், ராணுவமும் இணைந்து நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்ததாக ஜம்மு காஷ்மீர் மாநில கூடுதல் டிஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் அரசும் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்வது பெருமளவில் குறைந்திருப்பதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்டுள்ள 46 பயங்கரவாதிகளில் 37 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், 9 பேர் மட்டுமே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், உள்ளூர் பயங்கரவாதிகளைவிட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 மடங்காக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ஜம்மு காஷ்மீரில் தற்போது சுமார் 130 பயங்கரவாதிகள் உள்ளதாகவும், இவர்களில் பாதி பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in