Published : 26 Oct 2023 12:43 PM
Last Updated : 26 Oct 2023 12:43 PM

''சனாதன தர்மத்தின் மிகப் பெரிய அடையாளம் அயோத்தி ராமர் ஆலயம்'' - காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்

கமல்நாத் | கோப்புப் படம்

சிந்த்வாரா(மத்தியப் பிரதேசம்): சனாதன தர்மத்தின் மிகப் பெரிய அடையாளம் அயோத்தி ராமர் ஆலயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு, சிந்த்வாரா தொகுதிக்கு வருகை தந்த கமல்நாத், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அயோத்தி ராமர் ஆலயம் பாஜகவுக்கு சொந்தம் என்பது போல அக்கட்சியினர் பேசுகிறார்கள். ராமர் ஆலயம் நமது தேசத்தின் ஆலயம். சனாதன தர்மத்தின் மிகப் பெரிய அடையாளம் அது. ஒரு வழியாக ராமர் ஆலயம் கட்டப்பட்டதில் நான் மிகவும் மகிழ்கிறேன். அது ஒரு கட்சிக்கானதாக இருக்க முடியுமா?

மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட நாங்கள் முயன்றோம். அவர்களுக்கு தொகுதி ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை. அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதில்தான் பிரச்சினை. அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கினால், அது பாஜகவுக்கு சாதகமாக ஆகிவிடும் என கட்சியினர் கருதுகிறார்கள்.

சிந்த்வாரா தொகுதி மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர்கள் தொடர்ந்து என் பக்கம் நிற்கிறார்கள். அவர்கள் எனக்கு வாக்கு மட்டும் அளிப்பதில்லை; அன்பையும் மரியாதையையும் அளிக்கிறார்கள். சிந்த்வாரா தொகுதி மக்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள். அவர்கள் விரும்பினால் என்னோடு வந்து வாக்கு சேகரிக்கலாம். தனியாகவும் சென்று எனக்காக வாக்கு சேகரிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

அயோத்தி ராமர் ஆலயத்தின் பிராண பிரதிஷ்டை விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழ் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அளிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், "ஒரே ஒரு கட்சிக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்படுமா? யார் செல்வார்கள் யார் செல்ல மாட்டார்கள் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், தற்போது கடவுளை ஒரே ஒரு கட்சிக்குள் சுருக்கிவிடுவது சரியா? அழைப்பு என்பது அனைவருக்கும் இருக்க வேண்டும். அந்த விழா என்பது ஒரு கட்சிக்கானதாக இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் அழைக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x