

புதுடெல்லி: இந்திய கடற்பரப்பு வழியாகபோதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க ‘சமுத்திரகுப்தா’ என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் இந்திய கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனையில் கொச்சியில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
கடந்த மே மாதத்தில் மும்பையில் ரூ.24 கோடி மதிப்பிலான 1.2 கோடி வெளிநாட்டு சிகெரட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது.
இதுபோல் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை டெல்லியில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரையில் கைப்பற்றப் பட்டவற்றில் 328 கிலோ போதை பொருட்களையும் 80 லட்சம் சட்டவிரோத சிகரெட்டுகளையும் டெல்லி சுங்க அதிகாரிகள் நேற்று அழித்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.294 கோடி ஆகும்.
இது குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் நேற்று கூறுகையில், “நேற்று ரூ.284 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களையும் ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகெட்டுகளையும் அழித்தோம். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெற்ற கழிவு மேலாண்மை மையத்தில் வைத்து இவை அழிக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.