கர்நாடக பாஜக தலைவர் ஷோபா கரந்த்லாஜே? - மகன் விஜயேந்திராவை முன்னிறுத்தும் எடியூரப்பா

ஷோபா கரந்த்லாஜே
ஷோபா கரந்த்லாஜே
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக ​​பாஜக தலைவராக நளின்குமார் கட்டீல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் கடந்த ஆண்டே நிறைவடைந்தது. ஆனால் கடந்த மே மாதம் நடந்த தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இதேபோல பேரவை எதிர்க்கட்சி தலைவரும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் முன்னாள் துணை முதல்வர்கள்அசோகா, அஸ்வத் நாராயண், முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி, மூத்த தலைவர் பசனகவுடா யத்னால் ஆகியோர் மாநிலதலைவர் பதவியை கைப்பற்றமுயற்சிப்பதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, நளின் குமார் கட்டீல் ஆகியோர் முயற்சிப்பதாக தெரிகிறது.இந்நிலையில்மத்திய இணைஅமைச்சர் ஷோபாகரந்த்லாஜேவை மாநிலத் தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது எடியூரப்பாவுக்கு நெருக்கமானவரான இவர் தற்போது பாஜகவின் தேசிய‌ அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார்.

ஒக்கலிகா வகுப்பை சேர்ந்த இவர், தீவிர இந்துத்துவா ஆதரவாளர். அதேவேளை முன்னாள் முதல்வர் எடியூரப்பா தன் மகன் விஜயேந்திராவுக்கு தலைவர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. லிங்காயத்து வகுப்பை சேர்ந்த அவர், ஏற்கெனவே மாநிலத் துணை தலைவராக பதவி வகித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தென் கர்நாடகாவில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி பாஜகவை அதிக இடங்களில் வெற்றி பெற வைத்துள்ளார். எனவே அவருக்கு பதவி வழங்கினால் மாநிலம் முழுவதும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் எனக்கூறி எடியூரப்பா காய்களை நகர்த்திவருவதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in