இந்த ஆண்டுடன் ஹஜ் மானியம் ரத்து: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிப்பு

இந்த ஆண்டுடன் ஹஜ் மானியம் ரத்து: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிப்பு
Updated on
2 min read

நடப்பு ஆண்டு முதல் ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த ஆண்டில் முஸ்லிம் பெண்களின் கல்விக்காக சுமார் ரூ.700 கோடி மானிய நிதி செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஹஜ் புனித யாத்திரையும் ஒன்றாகும். இந்த புனித பயணத்துக்காக மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வந்தது. சராசரியாக ஆண்டுக்கு ரூ.650 கோடி முதல் ரூ.700 கோடியை மத்திய அரசு மானியமாக ஒதுக் கியது.

உச்ச நீதிமன்ற உத்தரவு

இந்நிலையில் ஹஜ் மானியம் குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 

மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட மத்திய அரசு விரும்பவில்லை. சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி, கவுரவத்துக்கு மட்டுமே அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கும் மானியத்தில் ‘ஏர் இந்தியா’ நிறுவனமே அதிகம் பயன் அடைகிறது. யாத்ரீகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன் இல்லை. 

இந்த ஆண்டு முதல் ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் வழங்கப்படாது. அதேநேரம் இந்த மானிய நிதி, சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். குறிப்பாக முஸ் லிம் பெண்களின் கல்விக்காக செலவிடப்படும்.

கடந்த 2012-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக ரத்து செய்ய அறிவுறுத்தியது. அதன்படியே தற்போது ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் சுமார் 8.5 லட்சம் சிறுபான்மையின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 1.83 கோடி இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

வரும் 18-ம் தேதி லக்னோவில் நடைபெறும் விழாவில் சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும். இதில் 9 மாநிலங்களைச் சேர்ந்த சிறுபான்மையின நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.25 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டனர். இந்த ஆண்டு 1.75 லட்சம் பேர் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியா செல்ல உள்ளனர்.

மேலும் முதல்முறையாக ஆண்களின் துணையின்றி 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் இந்த ஆண்டு 1,300 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் 4 பேர் கொண்ட குழுவாக ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். அவர்களின் பாதுகாப்புக்காக பெண் அதிகாரிகள் உடன் செல்வார்கள். அவர்கள் தங்குவதற்கு தனியாக இடவசதி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

விமான டிக்கெட்டைவிட கப்பல் பயண செலவு குறைவு என்பதால் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள கொள்கைரீதியாக சவுதி அரேபிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து புதிய திட்டத்தை செயல்படுத்துவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு தடை

ஹஜ் புனித யாத்திரைக்கான புதிய கொள்கையை ஹஜ் கமிட்டி வரையறுத்துள்ளது. இந்த கொள்கை அறிக்கை கடந்த அக்டோபரில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசை அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் கண்டனம்

கேரள காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ஹாசன் கூறியபோது, ‘‘ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் மத்திய அரசு சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது’’ என்றார். கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரமேஷ் சென்னிதாலா, உம்மன் சாண்டி ஆகியோரும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in