யூபிஎஸ்சி பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

யூபிஎஸ்சி பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
Updated on
1 min read

யூ.பி.எஸ்.சி. தேர்வுப் பிரச்சி னைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

“யூ.பி.எஸ்.சி. தேர்வில் எழுந் துள்ள பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணும்படி பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு வாரத்துக்குள் இப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கும். அதில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு இருக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடரும் போராட்டம்

இதனிடையே டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மாணவர் கள் நடத்திவரும் போராட்டம் திங்கள்கிழமையும் தொடர்ந்தது. யூ.பி.எஸ்.சி. பவன்முன்பாக திரண்ட மாணவர்கள் நுழைவுத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை எரித்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து உதவி கோரினர். அப்போது காங்கிரஸ் மாணவர் பிரிவின் தலைவரான ரோஹித் சர்மா, பொதுச்செயலாளர் மோஹித் சர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.

ராகுல் காந்தி கருத்து

இந்தச் சந்திப்பின்போது மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசியபோது, ‘காங்கிரஸ் கட்சி எப்போதும் மாணவர்களுக்கு ஆதரவாகவே இருக்கும், கிராமப்புறங்களில் இருந்து யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத வரும் ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் ஏற்றுக் கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார்.

2011-ல் யூ.பி.எஸ்.சி.யில் அறிமுகப்படுத்தப்பட்ட சிசாட் எனும் தொடக்கநிலைத் தேர்வின் வினாக்கள் ஆங்கிலப் புலமை பெற்ற மாணவர்களுக்கு மட்டும் சாதகமாக இருப்பதாகவும் கிராமப் புற மாணவர்கள், தாய் மொழியில் கல்வி பயின்றவர்களால் எழுத முடியாத நிலைமை உள்ள தாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்சினை யில் மாணவர்கள் அவ்வப்போது நடத்தி வந்த போராட்டங்கள் கடந்த வாரம் தீவிரமடைந்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி கள் கேள்வி எழுப்பின. இதனால் நாடாளுமன்றம் முடங்கியது.

தள்ளிப் போகுமா நுழைவுத்தேர்வு?

இப்பிரச்சினை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஞாயிற்றுக் கிழமை டெல்லியில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி சிசாட் நுழைவுத் தேர்வில் மத்திய அரசு சில மாற்றங்களை செய்ய முன் வந்திருப்பதாகவும் அதற்காக ஆகஸ்ட் 24-ம் தேதியில் நடைபெற உள்ள முதல்கட்டத் தேர்வை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in