Published : 23 Jul 2014 02:00 PM
Last Updated : 23 Jul 2014 02:00 PM

கட்ஜு விவகாரம்: மன்மோகன் சிங் பதிலளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எழுப்பியுள்ள புகார்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில்: "கட்ஜு புகார்கள் மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கீழ் அரசு எவ்வாறு செயல்பட்டது என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு விஷயத்திலும் அரசு சமரசம் செய்து கொண்டது என்பதை இது உணர்த்துகிறது. இவ்வளவு பெரிய பிரச்சினை எழுந்துள்ள நிலையிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மவுனம் காத்து வருவது, இவ்விகாரத்தில் மறைப்பதற்கு ஏதோ இருக்கிறது என்பதையே உறுதி செய்கிறது. எனவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.

அவருக்கு ஏதும் நெருக்கடி அளிக்கப்பட்டதா என்பதையும் விவரிக்க வேண்டும். இந்திய மக்களுக்கு இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய உரிமை இருக்கிறது. மன்மோகன் சிங் விளக்கம் நீதித்துறையின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த உதவும்" என்றார்.

முன்னதாக நேற்று, கட்ஜு புகார்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ் கட்சியும் பதிலளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.

இது குறித்து அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி செவ்வாய்க்கிழமை கூறும்போது, “அரசியல் காரணங்களுக்காக நீதித்துறை உட்பட பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க காங்கிரஸ் கட்சியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் முன்வரவேண்டும். காங்கிரஸ் கட்சியும் ஊழலும் ஒன்றுக்கொன்று இணைந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீதிபதிகள் நியமனத்தில் செய்த முறைகேடு, காங்கிரஸ் எவ்வாறு அரசியல் சட்ட அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தியது என்பதற்கு உதாரணமாகும்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x