Published : 30 Jan 2018 10:51 AM
Last Updated : 30 Jan 2018 10:51 AM

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கட்டுப்பாடு பக்தர்களிடம் விரைவில் கருத்து கேட்பு: ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் தகவல்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதால், இதுகுறித்து விரைவில் பக்தர்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று ஆந்திர மாநில இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மாணிக்கியால ராவ் நேற்று விஜயவாடாவில் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து திருமலைக்கு தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இவர்களில் சாதாரண நாட்களில் 50 முதல் 60 ஆயிரம் வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் சுமார் 75 ஆயிரம் பக்தர்களும் சுவாமியை தரிசிக்கின்றனர். இதுவே பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனி வார ஆஸ்தானம் போன்ற விசேஷ நாட்களில் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அலைமோதுகின்றனர். இதனால் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து நேற்று விஜயவாடாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாணிக்கியால ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதில் பலர் ஒரு மாதத்திலேயே 2 அல்லது 3 முறை கூட ஏழுமலையானை தரிசிக்கின்றனர். இதனால் ஆண்டிற்கு ஒருமுறை தரிசனம் செய்யும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனைத் தவிர்க்க புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக பக்தர்களிடம் விரைவில் கருத்துகள் கேட்கப்படும். அதன் பின்னர் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.

இந்து சமய அறநிலையத் துறை எனும் பெயரும் மாற்றப்படும். உடல் நலம் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத அறநிலையத் துறை ஊழியர்களுக்கு பதிலாக அவர்களது வீட்டில் ஒருவர் அந்த வேலையை தொடர புதிய அரசாணை பிறப்பிக்கப்படும். ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ரூ.100 கோடியில் வளர்ச்சி பணிகள் நடத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் மாணிக்கியால ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x