பக்கோடா விற்பனையும்; பிச்சை எடுத்தலும்: பாஜக, காங்கிரஸின் வார்த்தைப் போர்

பக்கோடா விற்பனையும்; பிச்சை எடுத்தலும்: பாஜக, காங்கிரஸின் வார்த்தைப் போர்
Updated on
1 min read

அரசியலில் வார்த்தைப் போர் சகஜம்தான். அதுவும் பாஜகவும் காங்கிரஸும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபடும் கட்சிகளே. ஆனால், தற்போதைய வார்த்தைப் போரில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், பிரதமர் மோடியும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஈடுபட்டிருப்பதே.

அண்மையில் பேசிய பிரதமர் மோடி, "பக்கோடா விற்பனை செய்து நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிப்பவர்கூட வேலை செய்யும் நபரே" எனக் கூறியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி, பக்கோடா விற்பதும் ஒரு வேலை எனக் கூறியிருக்கிறார். பிரதமரின் தர்க்கத்தின்படி பிச்சை எடுத்தலையும் ஒரு வேலையாக கருதலாம்தானே. வேறு வழியே இல்லாமல் பிச்சை எடுக்கும் ஏழை மக்களை வேலை பார்ப்பவர்களாக நாம் கருதலாமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுத்த பாஜக, அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சி ஏழைகளையும் லட்சியக் கனவுகளோடு இருக்கும் இந்தியர்களையும் அவமானப்படுத்திவிட்டது. எளிமையான பின்னணியில் இருந்துவந்து கடினமாக உழைக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களை பிழைப்புக்காக பிச்சை எடுப்பவர்களுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி எப்போதுமே ஏழைகளின் விரோதி என்பது உறுதிப்படுத்தியிருக்கிறது" எனக் குறிப்பிட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அடுத்தடுத்து பல ட்வீட்களை பதிவு செய்த ப.சிதம்பரம், "ஒரு விஷயத்தைத் திரித்து சொல்வதிலும் அதை வைத்து மோசடி செய்வதிலும் பாஜகவே தலைமை வகிக்கிறது.

பகோடா விற்பது என்பது ஓர் ஏழை தனக்காக ஏற்படுத்திக் கொள்ளும் கவுரவமிக்க சுய தொழில். ஆனால், அதை ஒரு வேலையாகக் கருத முடியாது. வேலை, என்பது நிரந்தரமானது, பணி பாதுகாப்பு அளிக்கக்கூடியது.

கடந்த மூன்று ஆண்டுகளில் அத்தகைய நிரந்தரமான, பணிப்பாதுகாப்பு நல்கக்கூடிய எத்தனை வேலைகளை இளைஞர்களுக்கு பாஜக அளித்துள்ளது எனக் குறிப்பிட முடியுமா? வேலை என்பதற்கும் சுயதொழில் என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்தே ஒரு விவாதம் நடத்தத் தேவையிருக்கிறது. அதேபோல், முத்ரா வங்கிகள் மற்றும் சிறுகடன் கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக கூறுவதையும் பாஜக நிரூபிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in