“பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன்” - மிசோரம் முதல்வர்

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா
மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா
Updated on
1 min read

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளைக் கொண்ட பேரவைக்கு நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் வரும் 30-ம் தேதி அன்று மிசோரம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் பிரதமர் மோடி, தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல்.

“மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்தபோது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சூழலில் பாஜகவுடன் பரிவு காட்டுவது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். அதனால் பிரதமர் மோடி தனியாக பரப்புரை மேற்கொள்வதும், நான் தனியாக பரப்புரை மேற்கொள்வதும் தான் சரியாக இருக்கும்” என மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியலில் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மிசோ தேசிய முன்னணி இயங்கி வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் தனித்து பயணித்து வருகிறது. காங்கிரஸ் இல்லாத இடத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மிசோரம் மாநிலத்தில் மியான்மர், வங்கதேசம் மற்றும் மணிப்பூரை சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புகலிடம் தேடி தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in