Published : 23 Oct 2023 04:08 AM
Last Updated : 23 Oct 2023 04:08 AM

பாலஸ்தீனத்துக்கு இந்தியா உதவி - மருந்து, படுக்கைகள் உட்பட 38 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

புதுடெல்லி: ஹமாஸ் தீவிரவாதிகள் - இஸ்ரேல் ராணுவம் இடையிலான போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 6.5 டன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், 32 டன் அத்தியாவசிய பொருட்கள் என 38 டன் நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி உள்ளது. காசா மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய விமானப் படை விமானம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த 16 நாட்களாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பை முற்றிலும் அழிக்கும் நோக்கில் சிறப்பு படையை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. காசா நகருக்கான மின்சாரம், குடிநீரையும் இஸ்ரேல் அரசுநிறுத்தியுள்ளது. இதனால், காசா மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சவுதி, கத்தார், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும், சர்வதேச தொண்டு அமைப்புகளும் காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பின. ஆனால், இப்பொருட்களை காசா நகருக்கு கொண்டுசெல்ல இஸ்ரேல் அனுமதி மறுத்து வந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்திய பிறகு, நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், தற்போது, பாலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது. 6.5 டன் மருந்து பொருட்கள், 32 டன் அத்தியாவசிய பொருட்கள் என மொத்தம் 38 டன் நிவாரணப் பொருட்கள், இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

காசாவில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது.6.5 டன் மருந்து, மாத்திரைகள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களுடன் எகிப்து நாட்டின் அல் அரிஸ் விமான நிலையத்துக்கு இந்திய விமானப் படை விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.

நிவாரணப் பொருட்களில், உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைக்கான கருவிகள், கூடாரங்கள், போர்த்திக்கொண்டு தூங்குவதற்கான ஸ்லீப்பிங் பைகள், தார்ப்பாய், படுக்கைகள், சுகாதார பொருட்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதலை கண்டித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நிற்பதாக உறுதிபட தெரிவித்தார். பாலஸ்தீனத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, ‘‘மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்’’ என்று உறுதியளித்தார். இந்த சூழலில், தற்போது பாலஸ்தீனத்துக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x