Published : 18 Jan 2018 08:20 PM
Last Updated : 18 Jan 2018 08:20 PM

மகாராஷ்டிராவில் ஊராட்சித் தேர்தலுக்காக பாஜகவுடன் கைகோர்த்த காங்கிரஸ்: விளக்கம் கேட்டு ராகுல் காந்தி கடிதம்

மகராஷ்டிராவில் கோண்டியா மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலுக்காக காங்கிரஸும், பாஜகவும் கைகோர்த்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இக்கூட்டணியால் கடும் அதிருப்தி அடைந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு மகாராஷ்டிர காங்கிரஸுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்ட ஊராட்சிக்கு அண்மயைில் நடைபெற்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து, ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்காக தேசியவாத காங்கிரஸுடன் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஊராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நெருங்கிய சமயத்தில், யாரும் எதிர்பாராத வகையில், அங்கு பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இதன் தொடர்ச்சியாக, கோண்டியா மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் சீமா மாதவிக்கு பாஜக ஆதரவளித்தது. அதேபோல், துணைத் தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளர் ஹமீது அக்பர் அலிக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் முறையே ஊராட்சித் தலைவர், துணைத் தலைவராக புதனன்று பொறுப்பேற்றனர்.

கோண்டியா மாவட்ட ஊராட்சித் தேர்தலில் உருவான இந்தக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையிலும் இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

ராகுல் காந்தி கடிதம்: இந்நிலையில், கோண்டியா மாவட்ட ஊராட்சி தேர்தலில் உருவான கூட்டணியால் அதிருப்தியடைந்துள்ள ராகுல் காந்தி, இதுகுறித்து உரிய விளக்கமளிக்குமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x