Published : 16 Jan 2018 09:20 AM
Last Updated : 16 Jan 2018 09:20 AM

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்டுகள் பாரபட்சத்தை உருவாக்கும்: உம்மன் சாண்டி கடும் கண்டனம்

மத்திய அரசு விநியோகிக்க திட்டமிட்டுள்ள ஆரஞ்சு நிறத்திலான பாஸ்போர்ட்டுகள், குடிமக்களிடையே பாரபட்சத்தை உருவாக்கும் என்று கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, பத்தாம் வகுப்பை நிறைவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர், குடியேற்ற அனுமதி சான்றிதழைப் பெற வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆரஞ்சு நிறத்திலான பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

பாதகமான முடிவு

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பத்தாம் வகுப்பை நிறைவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோருக்கு ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்டுகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அரசின் இந்த நடவடிக்கையால், படித்த இந்தியர்கள் - படிக்காத இந்தியர்கள் என்ற இரண்டு வகையான பிரிவுகள் உருவாக்கப்படும். இது, இந்தியக் குடிமக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும்.

சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் பெரும்பாலானோர் கடினமான சூழல்களுக்கு மத்தியில் உழைத்து வருகின்றனர். அவ்வாறு, அவர்களின் உழைப்பில் வரும் வருவாயால்தான், பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறி வருகிறது. அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அரசின் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும்பட்சத்தில், வெளிநாடுகளில் ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்போர் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவார்கள்.

மேலும், இது, அந்த மக்களின் தனித்தன்மையிலும், குணாதிசயங்களிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாது. இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு உம்மன் சாண்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x