

இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஈர்ப்பைத் தூண்ட பிராந்திய மொழியில் அறிவியல் தொடர்புகள் அமைதல் வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அறிவை வளர்ப்பதில் மொழி ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டுமே தவிர ஓர் இடையூறாக இருத்தல் கூடாது என அவர் கூறியுள்ளார்.
பேராசிரியர் சத்யேந்திரநாத் போஸின் 125-வது நினைவுநாளை ஒட்டி கானொளி காட்சி மூலம் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், "இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஈர்ப்பைத் தூண்ட பிராந்திய மொழியில் அறிவியல் தொடர்புகள் அமைதல் வேண்டும். அறிவை வளர்ப்பதில் மொழி ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டுமே தவிர ஓர் இடையூறாக இருத்தல் கூடாது. பொது மக்களின் அன்றாட வாழ்வுக்கு பயன்படும் வகையில் விஞ்ஞானிகள் தங்கள் அடிப்படை அறிவை பயன்படுத்த வேண்டும். ஏழைகளின் வாழ்வில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அமைதல் வேண்டும்.
உங்களுடைய கண்டுபிடிப்புகள் நாடு எதிர்கொண்டுள்ள சமூக - பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு அமைய வேண்டும். உங்கள் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களின் வாழ்வை எளிதாக்குகிறதா நடுத்தர வர்க்க மக்களின் சுமைகளைக் குறைக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்" என மோடி அறிவுறுத்தியுள்ளார்.