Published : 01 Jan 2018 01:27 PM
Last Updated : 01 Jan 2018 01:27 PM

திரிபுரா சட்டம் ஒழுங்கு பிரச்சினை: பாஜக - சிபிஎம் ட்விட்டரில் வார்த்தை மோதல்

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் ட்விட்டரில் பரஸ்பரம் மோதிக்கொண்டுள்ளன.

முதல்வர் மாணிக் சர்க்காரை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த அஸ்ஸாம் அமைச்சர் பேசியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெறும் திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி முதல்வர் மாணிக் சர்க்கார் தொகுதியான தன்பூரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பாஜகவைச் சேர்ந்த அசாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘திரிபுராவில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி அரசு தோல்வியைத் தழுவும், முதல்வர் மாணிக் சர்க்காரை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும்’’ எனக்கூறினார்.

இது, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அஸ்ஸாம் அமைச்சர் வரம்பு மீறி, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளதாக இடதுசாரி கூட்டணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த அமைச்சர் சர்மா "திரிபுராவில், கடந்த இரண்டு மாதங்களில் 14 முதல் 16 வயது வரையிலான 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு காரணமான குற்றவாளிகளை முதலில் கைது செய்யுங்கள். எனக்கு கண்டனம் தெரிவிப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" எனக் கூறினார்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் "நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் முதலிடத்தில், பாஜக ஆளும் அஸ்ஸாம் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாம் அமைச்சர் திரிபுரா முதல்வரை பற்றி அவதூறாக பேசுகிறார். இது, வெட்கக்கேடானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவையில் இடதுசாரிக் கூட்டணிக்கு 50 எம்எல்ஏக்கள் உள்ளனர். இங்கு, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் காலூன்ற பாஜக முயன்று வருகிறது. முதல்வர் மாணிக் சர்க்கார் அங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x