Published : 22 Jan 2018 03:40 PM
Last Updated : 22 Jan 2018 03:40 PM

மனிதன், குரங்கு- டார்வின் கோட்பாடு சொல்வது என்ன?

"டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறானது. மனிதன் இந்த பூமியில் எந்தக் காலத்திலும் மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் கூறவில்லை" மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் டார்வினின் கோட்பாடு என்னதான் சொல்கிறது எனப் பார்ப்போம்.

டார்வினிஸத்தை புரிந்துகொள்வோம்

1871-ம் ஆண்டு வெளியான சார்லஸ் டார்வினின் தி டிசன்ட் ஆஃப் மேன்' (‘The Descent of Man’) புத்தகம் இந்த உலகிற்கு உணர்த்த நினைத்தது மனிதனுக்கு, குரங்குகளுக்கும் மூதாதையர் ஒன்றே என்பதைத்தான். சத்யபால் சிங் கருதுவது போல் குரங்கில் இருந்து மனிதன் நேரடியாக பரிணாமம் அடைந்தான் என டார்வின் எங்குமே குறிப்பிடவில்லை. மாறாக பறவைகள், மீன்கள், பாலூட்டிகள், ஊர்வன உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு இடையேயான ஒற்றுமையை சுட்டிக் காட்டியதுடன் அனைத்து உயிர்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையது என்றே அவர் குறிப்பிட்டார். அதாவது, எல்லா பெரிய ஜீவராசிகளும் சிறு உயிரினங்களில் இருந்தே மரபணு உரு இயல் மாற்றங்கள் மூலமே பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்றார்.

டார்வின் மறைந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் 20-ம் நூற்றாண்டில்தான் அவருடைய கோட்பாடுகள் அறிவியல் ஆதாரங்களோடு விளக்கப்பட்டன. டிஎன்ஏ-வின் (deoxyribonucleic  acid) கண்டுபிடிப்பு பலலட்சம்கோடி ஆண்டுகளாக எப்படி மரபணு மாற்றம் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதற்கான விளக்கத்தை நல்கியது. சில உயிரினங்களின் உருவ அமைப்பு படிமங்களுக்கும், அவற்றின் அங்க அமைப்பு படிமங்களுக்கும் இடையே நிலவிய ஒற்றுமை டார்வினின் கோட்பாடுகளுக்கு மேலும் வலுசேர்த்தது. அதேபோல் குரங்க்குகளுக்கும் மனிதர்களுக்குமான மரபணு வரிசை ஒத்துப்போனதும் அந்த காலகட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களால் தெரியவந்தது.

மத ரீதியான எதிர்ப்புகள்:

டார்வினின் கோட்பாடுகளுக்கு எப்போதுமே மத ரீதியான எதிர்ப்புகள் இருந்துள்ளது. ஏனெனில், டார்வினின் கோட்பாடுகள் உலகம் இறை சக்தியால் உருவானது என்ற படைப்பாற்றல் கோட்பாட்டுக்கு விரோதமாக இருக்கிறது. எல்லா, மதநூல்களிலும் இவ்வுலகை மனிதர்கள் இறைவன் படைத்ததாகவே உள்ளது.

2017 செப்டம்பரில், துருக்கியில் உயர்கல்வி பாடத்திட்டத்திலிருந்து சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பற்றிய பாடம் முற்றிலுமாக அகற்றப்பட்டது. அதற்கு அந்நாடு கூறிய விளக்கம், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு டார்வின் கோட்பாடு அறிவுக்கு எட்டாத அதீத அறிவியல் என்பதே. ஆனால், இதை அந்நாட்டு கல்வியாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதிபர் எர்டோகன் மதச்சார்பற்ற தன்மையில் தேசத்தை விலக்குவதாகக் குற்றஞ்சாட்டினர். இதனால், துருக்கி மாணவர்கள் அடிப்படை அறிவியலைக்கூட தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும் என்றனர்.

விஞ்ஞானிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு:

மதவாதிகள் மட்டுமல்ல கடந்த காலங்களில் சில விஞ்ஞானிகள்கூட டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். டார்வினின் கோட்பாடுகளை உறுதி செய்யும் அளவுக்கு உயிரிகளின் படிமங்கள் கிடைக்காததையும், வாழும் மற்றும் அழிந்த உயிரினங்களுக்கு இடையேயான ஒற்றுமையை மூலக்கூறு உயிரியல் வாயிலாக உறுதிப்படுத்த முடியாததையும் சுட்டிக் காட்டி விஞ்ஞானிகள் டார்வின் கோட்பாட்டை ஏற்க மறுக்கின்றனர்.

அண்மையில் 'தி கார்டியன்' பத்திரிகையில் ஜூல்ஸ் ஹோவர்டு எனும் விலங்கியல் நிபுணர், "டார்வினின் கோட்பாடுகள் நாம் இயற்கையில் காணும் பல்வேறு விஷயங்களை விளக்குவதாகவே உள்ளது. ஆனால், இதைவிட துல்லியமாக இப்பூமியில் வாழும் உயிரினங்களின் பன்முகத்தன்மையை விளக்கும் ஓர் ஆய்வறிக்கை வெளிவந்தால் டார்வின் கோட்பாடு அறிவியலில் இருந்து வெளியேற்றப்படும்" எனக் கூறியுள்ளார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x