Published : 14 Jan 2018 08:29 AM
Last Updated : 14 Jan 2018 08:29 AM

சிறையில் கன்னட மொழி கற்கிறார் சசிகலா: பெண் கைதிகள் பிரிவில் நூலகம் அமைக்க உதவி

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கன்னட மொழி கற்று வருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் வயதானவர்களுக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ், சசிகலா கன்னட மொழி கற்று வருகிறார்.

அதற்கான வகுப்புக்கும் சசிகலா சென்று வருகிறார். அங்கு கன்னட மொழி எழுத்துகள், அடிப்படை வாசிப்பு, உச்சரிப்பு போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. கன்னட மொழியை வாசிக்கவும், எழுதுவது தவிர அடிப்படை கம்ப்யூட்டர் அறிவியல் கல்வியையும் கற்று வருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள இளவரசியும் சசிகலாவுக்கு துணையாக கன்னட மொழி வகுப்புக்குச் சென்று வருகிறார்.

இதுகுறித்து சிறை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கன்னட மொழியை சசிகலா எப்படி கற்றுக் கொண்டார் என்பதை சொல்ல இயலாது. ஏனெனில், அதற்கான தேர்வுகள் வாய்மொழியாக கேட்கப்படும். அவர் தற்போது மவுன விரதம் இருப்பதால், எந்தக் கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. ஆனால், கன்னட மொழியை அவர் சிறப்பாக எழுத கற்றுள்ளார்’’ என்று தெரிவித்தன.

கன்னட வகுப்புகள் முடிந்த பிறகு சசிகலா, இளவரசி இருவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், சிறையில் புத்தகங்கள் படிக்க சசிகலா ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், சிறையில் உள்ள நூலகம் ஆண் கைதிகள் உள்ள பிரிவில் உள்ளது. எனவே, சசிகலாவின் படிக்கும் ஆர்வத்தால், பெண் கைதிகள் பிரிவிலும் தனி நூலகம் அமைக்க சிறைத் துறை மற்றும் நூலகத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘விசாரணை கைதிகளுக்காக ஒரு நூலகமும், பெண் கைதிகளுக்காக ஒரு நூலகமும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. பெண்கள் பிரிவில் நூலகம் அமைக்க சசிகலா பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். மேலும் புத்தகங்களை வைக்கும் அலமாரிகளையும் அவர் தனிப்பட்ட முறையில் ஒழுங்கு வரிசைப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x