Published : 27 Jan 2018 09:36 AM
Last Updated : 27 Jan 2018 09:36 AM

குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட 6-வது வரிசையில் ராகுல் காந்திக்கு இடம்: காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்

டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், 6-வது வரிசையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

குடியரசு தின விழா டெல்லியில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பிரம்மாண்டமாக அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைப் பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. அவருக்கு 4-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், டெல்லி ராஜபாதையில் நேற்று நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்வையிட ராகுல் காந்திக்கு 6-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் இருந்தே அணிவகுப்பைப் பார்வையிட்டார் ராகுல். அவருக்கு அருகில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இருந்தார். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு அருகில்தான் ராகுல் அமர்ந்திருந்த 6-வது வரிசையும் இருந்தது.

ஆனால், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல் வரிசையில் அமர்ந்து அத்வானியுடன் சேர்ந்து அணிவகுப்பை பார்வையிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுர்ஜிவாலா, ட்விட்டரில் கூறும்போது, ‘‘பாஜக அரசு அற்ப அரசியலில் ஈடுபடுகிறது. வேண்டுமென்றே ராகுலுக்கு முதலில் 4-வது வரிசையில் இடம் ஒதுக்கினர். பின்னர் 6-வது வரிசைக்கு மாற்றினர். எனினும், எங்களுக்கு குடியரசு தினத்தை கொண்டாடுவதுதான் எல்லாவற்றுக்கும் மேலானது’’ என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட கடிதத்தில், ‘‘நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகள். நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் ஆபத்துக்கு உள்ளாகும் போதெல்லாம் அதைக் கட்டிக் காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இந்த குடியரசு நாளில் நீதி, சுதந்திரம், சமத்துவம் உட்பட அடிப்படை உரிமைகளை அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்று வோம் என்ற உறுதிமொழியை மக்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x