Published : 07 Jan 2018 10:07 AM
Last Updated : 07 Jan 2018 10:07 AM

கர்நாடகாவில் சாலை விதியை மீறியவர்களை பெல்ட்டால் தாக்கிய போலீஸார்: வீடியோ வெளியானதால் பரபரப்பு

கர்நாடகாவில் சாலை விதிமுறையை மீறிய இருவரை போலீஸார் பெல்ட்டால் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் கொப்பலில் கடந்த வியாழக்கிழமை, போலீஸார் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது, அங்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் சென்றதாகத் தெரிகிறது. இதையடுத்து, போலீஸார் அவர்களைப் பிடித்தனர். இதனால், போலீஸாருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் அந்த இருவரையும் கொப்பல் நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கைகளைக் கட்டி அமர வைத்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த இருவரையும் தனது பெல்ட்டால் சரமாரியாக தாக்கினார். இதனால் இருவரும் வலியால் கதறி துடித்தனர். இந்தச் சம்பவத்தை காவல் நிலையத்துக்கு வெளியே இருந்து பார்த்த ஒரு நபர், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இந்நிலையில், சில மணிநேரங்களிலேயே இந்த வீடியோ வைரலானது. போலீஸாரின் அத்துமீறலுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொப்பல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் கூறும்போது, ''நான் இன்னும் சம்பந்தப்பட்ட வீடியோவை பார்க்கவில்லை. இதில் தொடர்புடைய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x