Last Updated : 18 Oct, 2023 06:22 AM

 

Published : 18 Oct 2023 06:22 AM
Last Updated : 18 Oct 2023 06:22 AM

பாஜகவுடனான கூட்டணியால் உடைகிறது மஜத? - மாநில தலைவர் சி.எம்.இப்ராஹிம் போர்க்கொடி

கோப்புப்படம்

பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராஹிம் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மஜதவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சி கடந்தமாதம் இணைந்தது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி டெல்லி சென்று ம‌த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின்னர், மஜதவின் எதிர்க்கால நலனை கருத்தில் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்திருப் பதாக தெரிவித்தார்.

இதனால் மஜதவில் இருக்கும் முஸ்லிம்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மஜதவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.எம்.நபி, மாநில துணைத் தலைவர் சையத் சஃபிஃபுல்லா சையத், முன்னாள் டெல்லி பொறுப்பாளர் முகமது அல்தாஃப், முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவர் நசீர் ஹுசைன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் என்.எம். நூர் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

திட்டமிட்டே புறக்கணிப்பு: இந்நிலையில் மஜத மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம். இப்ராஹிம், ‘‘பாஜகவுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. குமாரசாமி இந்த விவகாரத்தில் திட்டமிட்டே என்னை புறக்கணித் துள்ளார். எனது தலைமையிலான மஜத பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. தேவகவுடாவும் குமாரசாமியும் பாஜகவுடன் கூட்டணி வைத்து கட்சியை பலி கொடுத்துவிட்டனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை: எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மஜத எம்எல்ஏக்களு டன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க இருக்கிறேன்''என்றார்.

தேவகவுடா, குமாரசாமிக்கு எதிராக சி.எம்.இப்ராஹிம் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மஜதவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மஜத உடையும் நிலையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x