

தேர்தல் செலவு கணக்கு காட்டத் தவறியது தொடர்பாக மகாராஷ்டிரம் முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரம் முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு, தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசில்: "தேர்தல் செலவு கணக்கு காட்டத் தவறிய உங்களை, ஏன் எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கூடாது? இதுகுறித்து, 20 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
2009-ல் நடந்த சட்டசபை தேர்தலில், பொகார் தொகுதியில் போட்டியிட்டு அசோக் சவான் வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது, தனக்கு ஆதரவாக கட்டுரைகள், செய்திகள் வெளியிடுவதற்காக, பத்திரிகை ஒன்றுக்கு அவர் பணம் கொடுத்ததாகவும், அந்த தொகையை தன் தேர்தல் செலவு கணக்கில் அவர் குறிப்பிடவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் சார்பில், அசோக் சவானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அசோக் சவான் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மகாராஷ்டிரம் முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.