

புதுடெல்லி: வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "உலகின் செல்வாக்கு மிக்க நாடுகளின் வரிசையில் தற்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் இந்தியாவை புதிய நம்பிக்கையோடுப் பார்க்கின்றன. எப்போதெல்லாம் நமது கடல்சார் திறன் வலிமையாக இருந்ததோ அப்போதெல்லாம் நமது நாடும் உலகமும் அதிக பலன் பெற்றுள்ளன.
இந்தியாவின் கடல்சார் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கென கொள்கைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் புதுடெல்லியில் நடந்து முடிந்த ஜி20 உச்சிமாநாட்டில், இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் பொருளாதார வழித்தடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு.
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா மாற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் புரட்சிகர மாற்றங்களை நாம் கொண்டு வந்த வண்ணம் உள்ளோம். வரும் 10 ஆண்டுகளில் கப்பல் கட்டும் துறையில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும். இந்தியாவில் தயாரிப்போம்; உலகத்துக்காக தயாரிப்போம் என்பதே நமது மந்திரம். வரும் காலங்களில் நமது நாட்டின் பல பகுதிகளில் கப்பல் கட்டும் தலங்களும் பழுதுபார்க்கும் தலங்களும் அமைய உள்ளன." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.